Friday, July 1, 2011

துரத்தும் சூழல், தொலையும் வேர்கள்


நம்மில் பலர் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு புலம்பெயர்ந்தவர்களாகவே இருக்கிறோம்.


புதிய தொழில்களும் அதனை சார்ந்த குடியிருப்புகளும் உருவாகும்போது, நாம் அதற்கு பொருந்தாதபோது நம்மை சூழ்நிலை இடம்பெயர செய்கிறது ஏன் நிர்பந்தமாகவே துரத்துகிறது. நாம் வெளியேறி அடையாளத்தை தொலைத்த பிறகு அந்த மண்ணும் உருமாறி வேறு வர்ணம் பூசிக்கொள்கிறது.

சொந்த மண்ணைவிட்டு வருவது தன் சொந்தங்களையும் அடையாளங்களையும் படிபடியாக இழப்பதின் ஆரம்பமே, அடையாளம் இழந்தவனை எங்கோ ஏதோ ஒரு மூலையில் வாழ்கை அவனை நடத்திகொண்டிருக்கிறது, பணமும் சந்தோசமும் இருக்கும்போது ஊரின் திருவிழாவிற்கு வந்துசெல்பவன் அது இல்லாதபோது தவிற்கிறான். சொந்தங்களின் திருமணத்திற்கும்,மரணத்திற்கும் மட்டுமே ஊரின் பக்கம் தலைகாட்டுபவன் புதிய மனிதர்களையும் சூழ்நிலைகளையும் தனது மண்னிலேயே சந்திக்க, தன் பூர்விகம் தன்னிடமிருந்து அந்நியமாவதை உணர்கிறான், வேறு வழியின்றி வாழ்கை தன்னை அடைத்துவைத்திருக்கும் இடத்தை தனதாக்க முயல்கிறான், இழந்த சொந்தங்களுக்கு ஈடாக நட்புகளை நாடுகின்றான்.

சொந்த மண்ணை தொலைத்தவன் வேறு என்னன்ன தொலைத்தான் என்பது பெருமூச்சோடு யோசிக்கும்போது அவனுக்கு மட்டுமே தோன்றி மறையும் மாயக்காட்சி.

அனைத்தும் மாறிக்கொண்டேதான் இருக்கும், மனிதர்களும் ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள்.

பின் குறிப்பு

சில வீட்டுப் பெயர்கள்

லாலா வீடு, பிஞ்சு வீடு, எலி வீடு, டப்பா வீடு, மாவு வீடு, இட்லர் வீடு, சொந்தகாரமூடு, ருக்குமூடு, காட வீடு, மெலாட்டகார வீடு, கச்சகாரமூடு,காராமணி வீடு, வெல்தான்மூடு

சில பட்டப்பெயர்கள்

சந்தடிச்சான் சம்மந்தம், கோயிலிடிச்சான் கோவிந்தன், தூண்டிவிட்டான் துக்காரம், ஒன்றை இட்லி கிழவி, ஊசி, குண்டு, எக்காளு, போண்டா


Tuesday, July 6, 2010

கொலைகளும் தற்கொலைகளும்



இன்றைய செய்திதாள்களில்கூட திருமணமான பெண் தன் பழைய காதலனுடன் சென்றதால் சமாதானம் பேச அழைத்து காதலனை வெட்டி கொன்றதோடு அவளையும் கொல்ல முயன்றனர் அவளின் தந்தை மற்றும் சகோதரர்கள் என்ற செய்தியும் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்த சென்ற மனைவியை திரும்ப அழைத்து வந்த கணவன் அவளை கொன்றதோடு எரித்தும் இருக்கிறார் என்ற செய்தியும் இடம் பிடித்து இருக்கிறது,இது போன்ற செய்திகள் நாள் தவறாமல் வரத்தான் செய்கிறதுஇது எல்லா மட்டத்திலும் கொலைகளாகவும் தற்கொலைகளாகவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

தன் பழைய காதலனுடன் சென்றதற்கு யார் காரணம் கொலை செய்த அதே பெற்றோர்கள்தானே காரணமாக இருக்கமுடியும்.அவளை முதலிலேயெ காதலனுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் அவள் ஏன் திருமணமான பிறகு ஒடப்போகிறாள்? அவள் விரும்பிய வாழ்க்கையை தர மறுத்தது எது ? ஜாதியா?குடும்ப பகையா ? கவுரவமா…? யாருக்காக இதனைப்பார்க்கிறிர்கள் உங்களுக்காகவா? அல்லது சுற்றி இருப்பவர்கள் உங்களைப்பற்றி நினப்பதாக நீங்களே நினைத்துக்கொள்ளும் கற்பனைக்காகவா? எதுவாக இருந்தாலும் முதலில் அவளின் ஆசையக் கொன்று பின்பு அவளின் வாழ்க்கையையும் கொன்று இறுதியாக காதலனையும் கொன்று சற்று தாமதித்திருந்தால் அவளையும் கொன்றிருப்பிற்கள், யோசித்துப்பாருங்கள் அவளை வாழப் பெற்றிர்களா ? கொலைசெய்து நீங்ளும் உங்கள் வாழ்வை சீரழித்துக்கொள்ள பெற்றீர்களா?

அடுத்து வேறுஒருவருடன் குடும்பம் நடத்த சென்ற பெண்னை கொன்ற கணவன்அவளை வைத்து சரியாக குடும்பம் நடத்தி இருந்தால் அவள் ஏன் ஒடிப்போகப்போகிறாள், சரியான மரியாதையையும் ,சாப்பாட்டையையும்,உடலுறவையும் அவளுக்கு தந்திருக்கப்பட்டிருக்குமா? கிடைக்காதபோது கிடைக்கும் இடத்துக்கு செல்கிறாள்.உன்னால் ஒழுங்காக தரப்பட முடியாததை இன்னொருவம் தரக்கூடாது என்ற மனோபாவம் எதைக்காட்டுகிறது ? அவளின் பக்கம் இருந்து மனப்போரட்டத்தையும் உணர்வுகளையும் பார்த்திருந்தால் அவள் எவ்வளவு பாவம் என்று புரிந்திருக்கும்.பிடிக்கவில்லை என்று தானே விட்டு சென்றால் அவளை அழைத்து வந்து கொன்றது எவ்வளவு குரூரம்.கொலைக்குற்றத்தில் சிக்கி அவனும் சீரழிந்தானே.

அவளின் விருப்பத்தை சகித்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் ஆனால் கொலையோ தற்கொலையோ செய்து வாழ்வை தொலைத்து விடாதிர்கள்,நாம் காட்டுமிராண்டிகள் அல்ல யோசித்து அறிந்துகொள்பவர்கள்.

திருமணம் என்பது என்ன பிறவியா ஒருமுறை மட்டும் நிகழ்வதற்கு, அது ஒரு சம்பவம் இருவருக்கும் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து சென்று வேறு பிடித்தமான வாழ்க்கையை அமைத்துகொண்டு நிறைவாக வாழ்வதை விட்டு இறக்கவைத்து இறந்து என்ன செய்யப்போகிறோம்...

Friday, May 28, 2010

போதையை சாதகமாக்கி




போதையை சாதகமாக்கி காசு சம்பாதிக்கும்
தமிழக அரசும்,கள்ள வியாபாரிகளும்…


நான் சந்தித்த 100 –ல் 98% பேர் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள் என்னையும் சேர்த்துதான். எப்போதாவதும் எப்பொழுதும் இடைப்பட்டவர்களும், வீட்டிற்கு தெரிந்தும் தெரியாமலும் குடிப்பவர்களும் இதில் அடக்கம்.
என்னதான் பொருளாதார,சமூக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பெரும்பான்மையாக குடிப்பது தவறு என்ற கருத்தே நிலவுகிறது,குடிப்பவர்களுக்கும் இது புரிகிறது, இதனை அடிப்படையாக கொண்டு அரசாங்கமும்,கள்ள வியாபாரிகளும் லாபம் சம்பாதிக்கின்றனர்.
அரசாங்கமே மதுக்கடைகளை நடத்திகொண்டிருக்கும் நிலையில் நாம் கேட்கும் மது வகைகளோ பிராண்டோ கிடைப்பதில்லை, சரியான விலை பட்டியல் வைப்பதில்லை,கூட்டத்தில் அடித்துப்பிடித்து அவர்கள் தருவதைத்தான் வாங்கவேண்டியுள்ளது, பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒவ்வொரு கடையிலும் ஸ்டாக்,விலை போன்றவைகள் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது,அதை விட அனைத்து விதமான சரக்குகளும் பெரும்பாலும் கிடைக்கிறது,சரியான பில் தரப்படுகிறது,மக்களும் வரிசையில் நின்று வாங்குகிறார்கள்…இது எப்படி அங்கு மட்டும் சாத்யமாகிறது ?

குறிப்பிட்ட கம்பெனிகளின் சரக்குகள் மட்டும்தான் இங்கு கிடைக்கிறது என்றால் அரசை ஆள்பவர்களுக்கும் அந்த கம்பெனிகளும் ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்று என்னவே தோன்றுகிறது. இதைவிட கொடுமை கிடைக்கும் சரக்கிலே டூப்ளிக்கெட் சரக்குகள் அதிகமாக இருக்கிறது என்பது குடிமக்களின் புலம்பலாக இருக்கிறது(பாட்டிலை பக்கவாட்டில் சாய்த்து மூடியின் சீலை சுற்றிப்பார்த்தால் அதில் புள்ளிபுள்ளியாக பிரஸ் செய்யப்படிருந்தால் சரக்கை எடுத்துவிட்டு தண்ணீரோ அல்லது வேறு போதை வஸ்த்துக்களோ சேர்க்கப்படிருக்கும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்)முதலில் விலை குறைந்த பிராண்டுகளில், கோட்டர்களில் ஆரம்பித்து இப்போது புல் பாட்டில்வரை ஆரம்பித்துவிட்டார்களாம், குடிக்கும் போது கள்ள சரக்கு எதாவது செய்துவிடுமோ என்ற பயமும் போதையுடன் ஒட்டிக்கொள்கிறது.
ஏன் கேட்ட சரக்கு கிடைக்கவில்லை? டூப்ளிக்கெட் வருகிறது என்று அரசாங்க ஒயின்சாப்களில் நின்று சண்டைபோட எத்தனை பேரால் முடியும்? அப்படியான சண்டை எங்கு போய்நிற்கும் ? குடிப்பதை,குடித்திருப்பதை சாதகமாக்கி கடை,பார் ஊழியர்களின் போக்கு எப்படி இருக்கும்? அசிங்கப்பட்டு,அடிவாங்கி கடையோடு முடியலாம்,போலீஸ் ஸ்டேசன் வரையும் போகலாம். எதற்காக அசிங்கப்பட்டாய் ,போலீஸ் ஸ்டேசன் சென்றாய் என்பதை வேலை செய்யும் இடத்திலோ,வீட்டிலோ,அக்கம் பக்கத்திலும் சொல்ல முடியுமா? சொல்லுவோமா? குடித்துவிட்டு தகறாறு செய்தான் என்றபேர்தான் மிஞ்சும் என்ற என்னமே நம்மை ஊமையாக்கிவிடுகிறது இதனை அரசாங்கம் நன்றாக புரிந்துவைத்திருக்கிறது.இதனால்தான் கள்ள சரக்குகள் ஒயின்சாப்களில் புழங்குகிறது.
ஒயின்சாப்களை அரசாங்கமயமாக்கி,போதையை சாதகமாக்கி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்பது நியாயமா?
பி.கு. குடி உடல் நலத்திற்கும்,மானத்திற்கும் கேடு

Thursday, March 11, 2010

வெட்கப் படவேண்டியவர்கள் தொலைக்காட்சியும், பத்திரிகையும் தான் நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் அல்ல…

மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து இயற்கையாக உருவாக்கப்பட்டவை பசி,தாகம்,தூக்கம்,வலி,உணர்வுகள்,உடல் உறவு போன்றவைகள், மற்ற அனைத்தும் கடவுள் உட்பட மனிதனால் தன் தேவை,பயம்,ஆசை,சுயநலம் போன்றவைகளுக்காக உருவாக்கப்பட்டவையே.
ஆன்மிகம் ஒரு காலகட்டத்தில் வாழ்கைக்கான அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தது.பின்பு வந்த அறிவியல் அதனை தகற்த்தது. உலகம் உருண்டை என்று ஆணித்தறமாக நாம் இப்போது எந்தளவு நம்புகிறோமோ அதே அளவு நம்பிக்கை உலகம் சதுரமானது, பாய் போன்று நீளமானது என்று நம்பப்பட்டது. இரண்டிற்கும் காரணம் ஆன்மிகம்-அறிவியல். வருங்காலத்தில் வேறு ஒன்று தோன்றி இரண்டுமே உண்மையில்லை என சொல்லலாம் அதையும் வரும் தலைமுறை நம்பலாம் நாம் அப்போது முட்டாளாகலாம்.பழைய தலைமுறை, நடப்பு தலைமுறை வரும் தலைமுறைகளின் வாழ்கை சூழலுக்கு ஏற்ப மாறும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையே.
இன்று ஆன்மிகம் என்பது தெளிவான வியாபாரமே, ஒருவனது துயரத்தை காதுகொடுத்து கேட்க ஆள் இருக்கிறார்கள் என்பதே எவ்வளவு ஆறுதல்.துயரத்தில் வரும் ஒருவனுக்கு மனநிம்மதியை தறுகிறது என்றால் அதற்காக கட்டணம் பெறுவதும்,தறுவதும் தவறில்லையே. இவ்வாறு பெற்ற பணத்தை ஏழைகளின் முண்னேற்றத்திற்காக மருத்துவமனை, கல்வி, சாலைகள், தானங்கள் தருவதில் நன்மையே.
மருத்துவராக இருப்பவர் நோயாளிகளுக்கு தரும் மருந்துகளை அவரும் எடுத்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே. ஒருவர் தான் செய்யும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறார என்பதை பார்க்கவேண்டுமே தவிர அவரது சொந்த இயற்கையான உணர்வுகளை பார்த்து தீயவன் என்பதில் என்ன நியாயம் ?
நித்தியானந்தா என்ற ஒரு ஆணும், ரஞ்சிதா என்ற பெண்னும் தங்களது சுய விருப்பத்துடன் உடல் உறவு கொல்வதில் என்ன தவறு ?
இவ்வாறாக நடந்த உறவை தொலைக்காட்சியின் மூலமும் பத்திரிகையின் மூலமும் வெளியிட்டதே தவறு….இது தொடர்ந்தால் ஒரு கணவனும் மனைவியும் உடல் உறவு கொண்ட காட்சி என வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை…..

Friday, February 26, 2010

வெட்கமாகத்தான் இருக்கிறது...


வெட்கமாகத்தான் இருக்கிறது ஆனால் சொல்லி ஆகத்தான் வேண்டும்
இன்றைய நடைமுறையில் காஞ்சி கோவில் கருவரை, பெண் டாக்டர் பலரை மணந்தது, இணையத்தில் வெளியாகும் பாலியல் தொடர்பான காட்சிகள்,நாள் தவறாமல் செய்திகளில் வரும் (கள்ளத்)தொடர்புகள், செல் போண்களில் பரவும் காட்சிகள். . .
இவை உணர்த்துவது என்ன? எது இவற்றை நடத்துகிறது ? ஏன் இவை நடக்கிறது ?
நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக காட்டிகொல்லும் இச் சமுகம் பெண்கள் சார்ந்த சில விசயங்களில் குறிப்பாக பாலியலில் இன்னும் அடக்குமுறையை கையாண்டுகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. எத்தனையோ பெண்கள் மவுணமாக அழுவது தெரிந்தும் தெரியாதது போல் செல்கிறோம்… அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பதற்காக… இன்னும் சொல்லப்போனால் நம் சுயநலத்தையும், இயலாமையையும் மறைப்பதற்க்காக.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் ஆண்களால் பெரியளவில் பின்பற்றாதபோதும் பெண்களால் அதிகமாக நடைமுறையில் இருக்கிறது, தேவை பூர்த்தி ஆகாத போதும் சமுகம்,குடும்பம் இவைகளை மனதில் கொண்டு ஆசைகளை அடக்கிகொள்கிறாள். பின்பு வேறு எந்த காரணங்களால் அவள் வேறு ஒருவனை நாடுகிறாள்….
பெரும்பான்மையான பெண்கள் பாலியல் இன்பம் நிறைவடையாத போதுமட்டும் வேறு ஒருவனை தேடுவதில்லை அது மூன்றாம் பட்சம் தான்…
இன்றளவும் அவர்களுக்கு விருப்பமில்லாமல் பல திருமணங்கள் ஏதோ காரணங்களுக்காக நடந்துகொண்டுதான் இருக்கிறது இதுவே இச்சமுகத்தின் மேல் உள்ள பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சில ஆண்கள் மனைவிகள் மேல் செலுத்தும் வரம்புமீறிய அதிகாரமும்,தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்படுவதும்,தனது வழிகாட்டுதலும் அறிவுறைகளும் நிராகறிக்கப்படுவதும்,தனது குழந்தைகளும் தானும் சரியாக பராமறிக்கப்படாதபோதும், தன் வாழ்க்கை முழுவதும் இதே போராட்டம் தான் என்பதை உணர்வதும் சிலரை எல்லையை தாண்ட செய்கிறது.
ஏதும் செய்யமுடியாத நிலையில் தன்னை மதிக்காத கணவனையும்,சமுகத்தையும் பழிவாங்குவதற்கான ஆயுதமாக வேறு ஆணுடன் உடல் மற்றும் மனது தொடர்பான உறவுகளை ஏற்படுத்திகொள்கிறாள். எவ்வளவு சொல்லியும் தினமும் குடித்துவிட்டு வரும் ஆணுக்கு நான் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் தொடர்பை ஏற்படுத்திகொண்டு பழிவாங்குவதாக மகிழ்ச்சியடைகிறாள். வாழ்க்கையில் பெரியளவில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காமல் அவமானப்படுபவள் இதையாவது அனுபவித்து கொள்ளலாமே என்று வேலி தாண்டுகிறாள்.
தான் மதிப்புவைத்திருக்கும் நெருங்கிய உறவினர் சிலரின் தொடர்ந்த பாலியல் தொல்லைகளும்,கணவன் தன் உடல் இச்சைக்காக மட்டும் அன்பாக பேசுகிறான் என்ற எண்ணங்களும் அவளுக்கு கற்பு ரீதியாக போதிக்கப்பட்டவைகளை மறு பரிசீலனை செய்ய தூண்டுகிறது. அவளின் குறைந்தபட்ச பாலியல் விருப்பத்தை கூட அறிந்துகொள்ள விருப்பமில்லாமல் அதைபற்றி கவலைப்படாமல் அவனது உடல் தேவையை மட்டும் பூர்திசெய்ய பெண்னுடன் இயங்கிவிட்டு போகும் போது அவளுக்கு என்ன தோன்றும்?
தனக்கு உடல் தேவையை பூர்த்திசெய்ய வேண்டியவர் அதை சரிவரதராமல் போனால் தான் வேறு ஒருவரிடம் அதை பெறுவதில் என்ன தவறு இருக்கிறது ?
வேறு ஒருவருடனான தொடர்பு வெளிவரும்போது அவளை மட்டுமே குற்றவாளியாக பார்க்கும் பார்வைக்கு காரணமான கணவனுக்கும் சமூகத்திற்கும் என்ன தண்டனை கொடுப்பது ?
???????????????????
பின் குறிப்பு: சமர்ப்பணம்-மேல் படித்தவைகளை புரிந்து கொள்ளும்
ஆண்களுக்கு

Monday, November 16, 2009

நான் பார்த்த பாவப்பட்ட பெண்கள்




செண்பகம்- இப்ப எங்க இருக்குண்ணு தெரியல…
பாக்கணும்னுஆசையாஇருக்கு ஆனா
அதுக்கு காரணமே இல்ல

நான் அப்ப ஒன்பதாவது படிச்சிட்டிருந்தேன்..என்னோட சிநேகிதன் சிவா புது சட்டைலாம் எடுத்திருக்காங்கனு ரொம்ப சந்தோசமா இருந்தான்,
ஸ்கூல்க்கு லீவுல்லாம் போட்டான், அவங்க வீட்டுக்கு சுண்ணாம்பு அடிச்சிட்டிருந்தாங்க,தெருவுல சிவா சித்தப்பா குமரேசன் கல்யாணம்ணு பேசிக்கிட்டாங்க அப்புறம் அவனும் சொன்னான்,

பக்கத்து வீட்டு தங்கம்மா கெழுவி யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்திச்சி “அவன் கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறான்”
எதிர்லயிருந்த பொம்பள குரலு “எல்லாம் வரவ சொல்லிக்கொடுப்பா”ண்ணு சொல்லிச்சு,
எனக்கு ஒண்ணும் புரியல ஆனா எதோன்னு மட்டும் தோணிச்சி
அந்த நொடியில குமரேசன் ஒல்லியான உடம்போட பஜார் டீ கடை ஸ்டால்ல நின்னு இருமிக்கிட்டே டீ ஆத்துற உருவம் என் கண்னு முன்னாடி வந்துபோச்சி, அவரு அப்பப்ப சளிய வேற துப்பிக்கிட்டே இருப்பாரு.

தெருவே கல்யாணத்துக்கு போய்ட்டு வந்துச்சி.
மதியானமா புது பொண்ண ஊருக்கு கூப்பிட்டு வந்தாங்க,
எனக்கு அவங்கள பாக்கணும்ணு ஆசையா இருந்திச்சி..என் சிநேகிதன் சிவாவ பாக்கவே முடியல.
ஒரு வாரத்துக்கப்புறம் சிவாவ பாக்க அவங்க வீட்டுக்கு போயிருந்தப்பதான் முதமுதலா அவங்கள பார்த்தேன்.

முகம் வட்டமா இருந்துச்சி,சிரிச்சப்ப ரெண்டு கன்னத்துலயும் குழிவிழுந்திச்சி, குழிவிழுந்தா ராசின்னு சொல்றத நெனச்சுகிட்டேன்,
உத்துப்பாத்தா ஒரு கண்ணு மட்டும் சின்னதா மாறு கண்ணா இருந்திச்சி அது கூட ராசின்னு சொல்லுவாங்க, தல முடி நீளமா இருந்திச்சி
ரொம்ப உயரம்னு சொல்ல முடியாது ஆனா உயரம், கோயில்ல இருக்கற செப்பு பொம்பள சாமி உடம்பு மாதிரி இருந்துச்சி அவங்க உடம்பு
அவங்கள பாக்கும் போது எனக்கு வெட்கமா இருந்துச்சி
எனக்கு அவங்க ஜாங்கிரி கொடுத்தாங்க நான் வெக்கப்பட்டுட்டு வேணாம்னு சொன்னேன், அதுக்கு அவங்க நீ இத சாப்பிட்டாதான் உங்க வீட்டுக்கு வருவேண்ணு சொன்னாங்க ஆனாலும் நான் சாப்பிடல….

அதுக்கப்புறம் நான் பத்தாவது போனேன். சிவா பெயிலாயிட்டதால அவங்கப்பா அவன மெக்கானிக் ஷெட்ல சேத்துவிட்டுட்டாரு. எனக்கும் அவனுக்கும் பாத்துக்க நேரம் இல்லாம போயிடிச்சி, எனக்கும் ஸ்கூல்ல வேற ப்ரண்டுங்க ஆயிட்டாங்க, எப்பவாச்சும் பாத்துக்குவோம் ஆனா அவன் அதிகம் பேசமாட்டான் மெக்கானிக் ஷெட்டுக்கு போன வருத்தம்னு நினைக்கிறேன். பத்தாவதுன்றதால நானும் ஸ்கூல்,டியுசன்,வீடுன்னு முடங்கிட்டேன்.

வீட்ல படிச்சிட்டிருக்கறப்ப பொம்பளைங்கல்லாம் கும்பலா உக்காந்து பேசிக்கறது கேக்கும். ஊர்ல இருக்கற எல்லார் கதையும் பேசுவாங்க ஆனா பெரும்பாலும் நல்லவிதமாவே யாரையும் பேசமாட்டாங்க,பேசற பொம்பளைங்கள்ல யாரும் அவ்வளவு சீக்கரம் எழுந்து போகமாட்டாங்க, ஏண்ணா போன பின்னாடி அவங்கள பத்தி பேசுவாங்கன்ற பயம்தான்,
ரகசியமா பேசும்போது காத்து மட்டும் வரா மாதிரி பேசுவாங்க அது அவங்களுக்கு மட்டும்தான் புரியும் நான் அடிக்கடி கேக்கறதால எனக்கும் புரியும்,அது மாதிரிதான் செண்பகம் பத்தி பேசறதும் எனக்கு அப்பப்ப கேட்கும்.
பதார்த்த கடை வையாபுரிக்கும் அவளுக்கும் தப்பான தொடர்பு இருக்கறதாவும்,கத்திரிக்கா வாங்கிட்டு காசு கொடுக்காம எல்லாம் கணக்குதாண்ணு சொல்லிட்டு வர்றதாவும் பேசிகிட்டாங்க…

பத்தாவது பாசாயி ப்ளஸ் ஒண் சேந்துட்டேன் அப்ப ஒரு நாள் சிவா வீட்ல அவங்க பாட்டி சத்தமா யாரையோ திட்டிட்டு இருந்துச்சு, பதார்த்த கடை வேற மூடி இருந்திச்சு…என் ப்ரண்டுங்க செண்பகமும் பதார்த்த கடகாரனும் அவ ஊரு திருவிழாக்கு போனப்ப கழனியில கட்டிபிடிச்சிட்டிருந்தத யாரோ பாத்து சொல்லிட்டாங்களாம்ணு சொன்னாங்க,நான் சிவாட்ட கேட்டதுக்கு அவங்க குடும்ப மானத்த வாங்கறதுக்கிண்ணே வந்து சேந்திருக்குனு திட்டினான்.
அர மணி நேரம் கழிச்சி தெருவுல குமரேசன் எப்பவும் வேலைக்கு போராமாதிரிதான் போயிட்டிருந்தாரு,அப்புறம் பதார்த்தகடயும் தொறந்திருந்திச்சி,செண்பகமும் முன்னமாதிரியே இருந்தாங்க.

ப்ளஸ் டூ படிச்சிட்டிருந்தன் குமரேசனுக்கு உடம்பு சரியில்ல வேலைக்கு போவாம வீட்லயே இருந்தாரு செண்பகம்தான் தனக்கு பொறந்த ஒரு பையனையும் ,பொண்ணையும்,குமரேசனையும்காப்பாத்தணுமேண்ணு கொளுத்து வேலைக்கு போயிட்டிருந்திச்சு. மேஸ்திரிக்கும் செண்பகத்துக்கும் மேட்டர்னு பேசிகிட்டாங்க…எங்கம்மாட்ட கடன் வாங்குறதுக்காவ செண்பகம் எங்கவீட்டுக்கு வந்திருந்தாங்க,காசு கொடுத்துட்டு பொறுமையா பேசிட்டிருந்த எங்கம்மா நான் வந்ததும் செண்பகத்த அனுப்பறதுலயே குறியா இருந்தாங்க..

நான் காலேஜ் படிகறதுக்கு சென்னை வந்துட்டேன்.
ஊருக்கு போயிருந்தப்ப குமரேசன் செத்துட்டார்ணு சொன்னாங்க, எங்கம்மா ’பிரியோஜனமே இல்லண்ணாலும் பேருக்கு புருஷன்னு இருந்தா அந்த பொண்ணுக்கு ஆதரவா இருந்திருக்கும்னு’ சொன்னாங்க

காலேஜ் பைனல் இயர் பொங்கலுக்கு ஊருக்கு போயிருந்தப்ப
சிவா வீட்லந்து செண்பகத்த தொரத்திட்டதா சொன்னாங்க புருசன் செத்து எட்டு மாசத்துக்கு அப்புறம் நாலு மாசம் கருவ வயித்துல சொமந்துட்டிருந்தாங்களாம்.
பொறந்த வீட்லயும் சேக்கலையாம் , பையன மட்டும் இங்க வீட்டுட்டு பொண்ண மட்டும் கூட்டிட்டு எங்கயோ போயிட்டாங்களாம்.
எனக்கு அந்த பொண்ண இங்கய விட்டுட்டு போயிருக்கலான்ம்ணு தோணுச்சி ….ஆனா அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுது சிவாவோட கல்யாணம் ஆன அண்ணன் தான் அந்த கர்பத்துக்கு காரணமாம்.

எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சே குமரேசன் எதுக்கு கல்யாணம் பண்ணணும்?வந்தவள தேவிடியானு சொல்லணும்? எனக்கு அப்பப்ப தோண்ற கேள்வி இது.

இப்ப செண்பகம் எங்க இருக்குன்னு தெரியல…
பாக்கணும்ணு ஆசையா இருக்கு
ஆனா அதுக்கு காரணமே இல்ல

Monday, October 26, 2009

வருக வெட்கம் பதிக

சொல்லமுடியும் சொல்லமுடியாத வெட்கத்தை..........

முதன்முதலாக

அவர்களது உள்ளத்திலே ஒடுக்கப்பட்டு ஒளித்து வைக்கப்படிருக்கும் உணர்வுகளை பார்க்க ஆரம்பித்தேன் -சொல்லமுடியாத வெட்கம்.